பாகிஸ்தானில் கலவரம்: நவாஸ் செரீப் பதவி விலக மறுப்பு

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (14:32 IST)
பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக மறுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் செரீப் ஆட்சியில் பல்வேறு குலறுபடி நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இம்ரான் கான் மற்றும் காத்ரியின் கட்சியினர் சேர்ந்து போராட்டங்களை நடத்திறனர். லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரை தொடர் பேரணி, மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் நவாஸ் செரீப்பின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்த முயற்ச்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் மீது கற்களை வீசி போராடினர்.

இதனால் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, மேலும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இதனால் பலர் படுகாயமடைந்தனர். நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் இம்ரான் கான், காத்ரி ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இஸ்லாமாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இம்ரான்கான் கைதானால் போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்