'ஒபாமா வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்கு’ - வடகொரியா தாக்கு

சனி, 27 டிசம்பர் 2014 (19:45 IST)
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை “ஒபாமா வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்கு” என வடகொரியா விமர்சித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளிலிருந்து தகவல் திருடப்பட்டன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதியது.
 

 
ஏனெனில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ’தி இன்டர்வியு’ என்கின்ற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்தது. இந்நிலையில்தான் சோனி  நிறுவனத்தின் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டன.
 
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் வடகொரியா தேசிய பாதுகாப்பு கமிஷன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ’இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தங்கள் நாட்டின் மீது அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் வெள்ளை மாளிகை, பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகும்’ என்றும் எச்சரித்திருந்தது.
 

 
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் வடகொரியாவில் இணையதள சேவை முடங்கியது. இந்த முடக்கத்திற்கு அமெரிக்காவின் சதியே காரணம் என்று வட கொரியா பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
 
இதற்கிடையில் சோனி நிறுவனம் அறிவித்தபடியே கிறிஸ்துமஸ் தினத்தில், ‘தி இண்டர்வியூ’ திரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
 
தற்போது வடகொரியா பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா. அவரது பேச்சும், செயலும் குரங்கிற்கு ஈடானதுதான்' என்று அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்