வட கொரியாவைச் சேர்ந்த 50 பேர் தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்ததால் படுகொலை

வியாழன், 30 அக்டோபர் 2014 (17:54 IST)
தென் கொரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சீரியல்களை பார்த்ததற்காக வட கொரியாவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் தென் கொரிய நாட்டு படங்கள், வீடியோ பதிவுகள், மெமரி கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தென் கொரிய நாட்டு வானொலிகள் போன்ற சாதனங்கள் கறுப்பு சந்தை வழியாக விற்கப்படுகின்றன.
 
இதனை தடுக்க பல வகையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென் கொரிய படங்கள் அங்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன.
 
இந்த நிலையில் 2014 ஆம் வருடத்தில் தென் கொரிய சீரியல்களை இணையம் வழியாக விதிமுறைகளை மீறி பார்த்ததற்காக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பொது இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
வட கொரியாவில் கடந்த சில மாதங்களில் காணாமல் போன சிலர் குறித்து தகவல் தெரியாத நிலையில் அவர்கள் இந்த படுகொலையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உள்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த செய்தி வட கொரிய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வட கொரிய மக்களுள் சிலர் அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதனிடையே, கடத்தலில் ஈடுபடும் நபர் ஒருவர் தென் கொரிய உளவுத்துறையிடம், "வட கொரிய ஆண்களுக்கு தென் கொரிய திரைப்படங்கள் மிகவும் பிடித்துள்ளது. அதில் வரும் சண்டை காட்சிகள் ஆர்வத்துடன் பார்ப்பவையாக உள்ளது. அதனால் அந்த படங்களை பதிவிறக்கம் செய்து விற்று வருகிறேன்" என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இதே போல தென் கொரிய படங்களை பார்த்ததாக 80-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். சுமார் 10,000 மக்களை விளையாட்டு அரங்கம் ஒன்றில் வைத்து அவர்களின் மத்தியில் இந்த படுகொலை நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்