21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு: ஜப்பானில் நரேந்திர மோடி பேச்சு

திங்கள், 1 செப்டம்பர் 2014 (11:35 IST)
5 நாள் சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்று தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூட்டத்தில் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் நாட்டுக்குச் சென்றுள்ளார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“கடந்த 100 நாட்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற்கொண்டுள்ளது எனவும், மேலும் நல்லாட்சிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நாட்டின் முதல் காலாண்டில் வர்த்தக வளர்ச்சி 5.7 சதவீதம் உயர்ந்துள்ளது. திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் உலக அளவிலான நிலையை எட்டிபிடிக்க நான் விரும்புகிறேன்.

திறன் மேம்பாட்டில் ஜப்பானை முன்மாதிரியாக எடுத்து, பின்பற்ற நினைக்கிறோம். ஆராய்ச்சி துறையில் ஜப்பானைப் போன்று வளர்ச்சி பெற நினைக்கிறோம்.

2020 ஆம் ஆண்டில் உலகத் தொழில்துறையின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு திறனை மேம்படுத்த விரும்புகிறோம். இந்தியா-ஜப்பான் இடையே நிலவும் உறவு ஆசியாவின் அமைதியில் பெரும் பங்கு வகிக்கிறது.

21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இரு நாடுகளும் நட்புறவுடன், அதிக திறனுடன் உலக அரங்கில் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து செல்லும் என நான் நம்புகிறேன்.

ஒரு நாட்டின் கலாசாரத்தை மற்றொரு நாட்டினர் தெரிந்து கொள்ள வேண்டும்.மற்ற நாட்டின் மொழியையும் அறிந்து கொள்ள வேண்டும்“  இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்