தாய்லாந்து-மலேசியா எல்லைப் பகுதியில் சவக்குழிகள் கண்டுபிடிப்பு

சனி, 2 மே 2015 (06:13 IST)
மலேசியாவுடனான எல்லைப் பகுதியில் குறைந்தது 32 சவக்குழிகளை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.


 
அந்தப் பகுதி மனிதர்களைக் கடத்தும் ஆட்கள் செயல்படும் பகுதி எனவும் தாய்லாந்து அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
அந்த சவக்குழிகளில் இருந்து பல உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டாலும், அங்கு யார் எப்போது புதைக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
எனினும் மியான்மாரைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவரான ரோஹிஞ்சா மக்களாக அவர்கள் இருக்கக் கூடும் எனும் ஊகங்கள் எழுந்துள்ளன.
 
பர்மா என்று முன்னர் அழைக்கப்பட்ட மியான்மாரில் அடக்கி ஒடுக்கப்பட்ட காரணத்தால் ரோஹிஞ்சா மக்கள் மனிதர்களை கடத்தும் கும்பல்கள் மூலம் அங்கிருந்து வெளியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து சவக் குழிகளில் இருந்தும் அடுத்த சில நாட்களில் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைகளை நடத்தப்படும் என தாய்லாந்தின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்