தொடர் விபத்து: மலேசியன் ஏர்லைன்சின் பெயரை மாற்ற அரசு ஆலோசனை

செவ்வாய், 29 ஜூலை 2014 (19:26 IST)
மலேசிய விமானம் தொடர்ந்து விபத்துக்கு உள்ளாவதை தொடர்ந்து அதன் பெயரை மாற்ற மலேசிய அரசு ஆலோசித்து வருகிறது. 
 
மலேசியாவின் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 298 பயணிகளுடன் கடந்த 17 ஆம் தேதி நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகர் நோக்கி சென்றது. அப்போது உக்ரைன் வான்வெளியில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியாயினர்.
 
இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு முன், கடந்த மார்ச் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் வான்வெளியில் பறந்த போது மாயமானது. 
 
இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விமானங்கள் விபத்துக்குள்ளானதில் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக கடுமையான வருவாய் இழப்பையும், நற்பெயரையும் இழந்துள்ளது.
 
எனவே மலேசியன் ஏர்லைன்ஸ் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பெயருடன், வெளிநாடுகளின் முதலீடுகளை திரட்டி விமான நிறுவனத்தை நவீனப்படுத்த மலேசியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களை கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளில் அதிகபட்ச முதலீட்டை மலேசிய அரசே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்