மகிந்த ராஜபக்சே இனிமேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது

வியாழன், 30 ஏப்ரல் 2015 (19:54 IST)
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இனி தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
 
சிங்கள கடும்போக்குவாதிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் வரம்பில்லா அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 19ஆவது சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.

 
இந்தச் சட்டத்தில் உள்ள சரத்துக்களின்படி, இரண்டு தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட முடியாது என்பதை வலியுறுத்துகின்றது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே இனிவரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
 
மேலும், அந்த 19ஆவது சீர்திருத்த சட்டத்த்தின்படி இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
 
ஏனெனில், கோத்தபய ராஜபக்சே அமெரிக்க மற்றும் இலங்கை நாட்டுக் குடியுரிமைகளைக் கொண்டிருக்கிறார். எனவே அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யாமல் கோத்தபய ராஜபக்சே தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை தோன்றியுள்ளது.
 
கோத்தபய ராஜபக்சே அண்மையில் கூட கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அடுத்த தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சட்டத்தின் மூலம் கோத்தபயவின் அரசியல் வரவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்