உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்து வரும் வர்த்தக கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட ப்ரிக்ஸ் நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த வரி விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக மோதல் எழுந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தைக்காக தற்காலிக வரி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சீனா தொடர்ந்து அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்த்து புதிய வர்த்தக மேலாதிக்கத்தை அமெரிக்காவிற்கு எதிராக அமைப்பதில் முனைப்புடன் உள்ளது. சமீபத்தில் இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக மானசரோவர் யாத்திரை அனுமதி, இமாச்சல வழி வணிக பாதை, விமான சேவை மறுதொடக்கம், இந்தியாவிற்கு காந்த கனிம ஏற்றுமதி என பல திட்டங்களை அறிவித்தது.
சமீபத்தில் சீனாவில் நடந்த சந்திப்பில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பேசிக் கொண்டிருந்ததே ட்ரம்ப்பை கோபத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ப்ரிக்ஸ் நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய வளர்ந்து வரும் நாடுகள் ஒருங்கிணைந்த அமைப்புதான் ப்ரிக்ஸ். இதில் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேச்யா, ஈரான் உள்ளிட்டவை உறுப்பு நாடுகளாக உள்ளன. ப்ரிக்ஸ் கூட்டமைப்பை சீனா வலுப்படுத்தினால் அது அமெரிக்காவுக்கு எதிரான பெரும் பொருளாதார நகர்வாக இருக்கும். ஏற்கனவே சீனா, ரஷ்யா, இந்தியா இடையேயான உறவு வலுவடைந்துள்ள நிலையில் சீனாவின் இந்த நகர்வு உலகளவில் உற்று நோக்கப்படுகிறது.
Edit by Prasanth.K