இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலர் இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர்.
இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த 11ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமானம் மூலமாக சவப்பெட்டி கொண்டு வரப்பட்டது.
கடந்த 14ம் தேதி ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டது. அன்று மாலை முதல் இறுதி சடங்கு நடைபெறும் 19ம் தேதி முதல் பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை ராணியின் இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உலக தலைவர்கள் பலரும் இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்து சென்றடைந்துள்ளார்.