ஜப்பான் நாட்டு செய்தியாளர் தலை துண்டித்து கொலை: ஐ.எஸ். அமைப்பு வெறிச்செயல்

ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (15:17 IST)
ஜப்பான் நாட்டு செய்தியாளர் கென்ஜி கோடோவின் தலை துண்டிக்கப்பட்டு இறந்த உடலை படம்பிடித்து வீடியோவாக நேற்று ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.


 

 
ஐ.எஸ். அமைப்பினர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு ஜோர்டான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
 
இதற்காக ஜோர்டான் விமானி ஒருவரையும், ஜப்பான் நாட்டு செய்தியாளரான கென்ஜி கோடோ என்பவரையும் ஐ.எஸ். அமைப்பினர்,  பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.
 
சிறையில் இருக்கும் பெண்ணை, தங்களின் நிபந்தனையை ஏற்று, விடுதலை செய்யாவிட்டால் இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டி வந்தனர். இதற்கு சர்வதேச அமைப்புக்கள் முன்வராததை அடுத்து ஜப்பான் நாட்டு செய்தியாளர் கோடோவை தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
 
இது குறித்து, ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில், கோடோவின் உடலின் பின்னணியில் முகத்தை மறைத்து நிற்கும் ஒருவர், ஜப்பானியர்களை குறிவைத்து மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
 
இந்நிலையில், இந்த வீடியோ பதிவுகளும், கோடோ கொலை செய்யப்பட்டதும் உண்மை தான் என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் நகடனி உறுதி செய்துள்ளார்.

‘இந்த கொடிய செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு இல்லை‘ என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டன் செய்தியாளர் ஒருவருவர் ஐ.எஸ். அமைப்பினரால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்