’பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும்’ - விமான போக்குவரத்து நிபுணர்

வெள்ளி, 2 ஜனவரி 2015 (17:38 IST)
பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும் என்று ஆஸ்திரேலியா விமான போக்குவரத்து நிபுணர் கூறியுள்ளார்.
 
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய்த 162 பேரும் பலியாகினர்.
எனவே விபத்துக் குள்ளான விமானத்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் 90க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
 
இருந்தும் மீட்பு பணிகள் இன்னும் முடியவில்லை. பலியானவர்களின் உடல்கள், விமானத்தின் பாகங்கள் முழுவதும் மீட்கப்படவில்லை. 7 பேரினது உடல்கள் மீட்கப்பட்டது. தற்போது மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
எனவே, இதுவரை மீட்கப்பட்டுள்ள பிணங்களின் எண்ணிக்கை 9  அவர்களில் ஒரு பெண் பிணம் விமான பணிப்பெண் என அடையாளம் காணப் பட்டுள்ளது. மற்றொரு பெண் பயணி ஹயாதி லுத்பியா ஹமீது என தெரிய வந்துள்ளது.
 
பிணங்களுடன் பயணிகளின் உடமைகளும் மீட்கப் பட்டுள்ளன. 2 பேக்குகள், ஒரு சூட்கேஸ், விமானத்தின் ஏணி மற்றும் விமானத்தின் சிதைந்த பகுதியும் மீட்கப் பட்டுள்ளது. விமான விபத்து குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் விமான போக்குவரத்து நிபுணர் ஜெப்ரீ தாமஸ் கூறுகையில், ’பயணிகளின் உடல்கள் விமானத்திற்குள் தான் இருக்க வேண்டும். விமானத்தின் உடைந்த உடற்பகுதி வழியாக வெளியே வந்த உடல்கள் தான் தற்போது மீட்கப்பட்டுள்ளன. அதனால் பல பயணிகளின் உடல்கள் அவரவர் இருக்கையில் தான் இருக்கும்’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்