இஸ்ரேல் விமானத் தாக்குதல் 3வது நாளாக நீடிப்பு: 20 பாலஸ்தீனியர்கள் சாவு

வியாழன், 10 ஜூலை 2014 (17:40 IST)
பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மேலும் உக்கிரமடைந்துள்ளது. இன்று காசா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் ராக்கெட் மற்றும் விமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர்.
 
காசா நகரத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலுக்கு பொதுமக்கள் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி வருகின்றனர்.
 
அந்த வகையில் இன்று 300 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியது. இதில், 20 பேர் இறந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த உக்கிரமான தாக்குதல்களில் இதுவரை 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை காசாவில் 750க்கும் மேற்பட்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இஸ்ரேல் மீது சுமார் 300 ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்