இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டம்: அமெரிக்க பத்திரிகை தகவல்

புதன், 29 ஜூலை 2015 (21:15 IST)
இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தயாராகி வருவதாக, விசாரணை ஆவணத்தின் தகவலை அமெரிக்காவைச் சேர்ந்த யூஎஸ்ஏ டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 

 
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, "இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்த தாக்குதல் அமெரிக்காவுடனான சண்டையை மீண்டும் தூண்டுவதாக அமையும். அமெரிக்கா தங்கள் அனைத்து கூட்டாளிகளுடன் இணைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்யுமானால், நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவோம். இது இறுதியான யுத்தமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கன் மீடியா இன்ஸ்டிட்யூட் வெளியிட்ட விசாரணை ஆவணத் தகவலை பிரசுரித்த யூஎஸ்ஏ டுடே, உருது மொழியில் எழுதப்பட்ட 32 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தனது செய்தியில் மேற்கோள்காட்டியுள்ளது.
 
இந்த ஆவணம் தாலிபான்களுடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தானியரிடமிருந்து பெறப்பட்டதாகவும் பின்னர், ஹார்வர்ட் அறிஞர்களால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு பல முறை மூத்த உளவுத்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
 
'இஸ்லாமிக் ஸ்டேட்டின் சுருக்கமான வரலாறு' என்று பெயரிடப்பட்ட அந்த ஆவணத்தில், இந்தியாவின் மீதான தாக்குதல் தெற்காசிய ஜிகாதிகளின் புனிதப் போர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி பல மாகாணங்களை தங்களது வசம் கொண்ட ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் சர்வதேச நாடுகளுக்கு எதிராகவும் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது சர்வதேச அளவிலான உளவுப் பிரிவுகள் எச்சரித்து வருகின்றன.
 
பிரான்ஸில் இருவேறு தாக்குதலை நடத்திய இந்த இயக்கம், உலகின் பல நாடுகளில் இளைஞர்களை ஈர்த்து இயக்கத்துக்கு ஆள்சேர்த்து வருகிறது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போர் நடத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்