7 ஆண்டுகளில் இந்தியா சீனாவை விஞ்சிவிடும் - ஐ.நா. அறிக்கை

வியாழன், 30 ஜூலை 2015 (14:08 IST)
மக்கள் தொகையில் இன்னும் ஏழு ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 
2014ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் சீனா, 135 கோடியே 56 லட்சத்து 92,576 பேருடன் முதலிடத்திலும், இந்தியா 123 கோடியே 63 லட்சத்து 44,631 பேருடன் இரண்டாமிடத்திலும் உள்ளது.

 
உலக மக்கள் தொகையில் 19 சதவீதம் பேர் சீனாவிலும், 18 சதவீதம்பேர் இந்தியாவிலும் உள்ளனர். ஆனால் 2022ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளிவிடும் என்று ஐ.நா. சபை வெளியிட்டுள்ள உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் கூறுகிறது.
 
தற்போது மக்கள் தொகை மிகுந்த முதல் 10 நாடுகளில் அமெரிக்கா 3ஆவது இடத்திலும், இந்தோனேஷியா 4ஆவது இடத்திலும், பிரேசில் 5ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 6ஆவது இடத்திலும், நைஜீரியா 7ஆவது இடத்திலும், வங்கதேசம் 8ஆவது இடத்திலும், ரஷ்யா 9ஆவது இடத்திலும், ஜப்பான் 10ஆவது இடத்திலும் உள்ளது.
 
தற்போது உலகின் மொத்த மக்கள்தொகை 7.3 பில்லியனாக உள்ளது. இது 2030இல் 8.5 பில்லியனாகவும், 2050இல் 9.7 பில்லியனாகவும், 2100ஆம் ஆண்டுகளில் 11.2 பில்லியனாகவும் உயரும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்