புல்வாமா தாக்குதலுக்கு பின் இம்ரான் கான் பேச்சு - ''இந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம்''
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:24 IST)
புல்வாமா தாக்குதல் நடந்தபிறகு முதல்முறையாக அது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியான பிடிவியில் அந்நாட்டின் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த வியாழனன்று இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் (துணை காவல் படை) வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமைப்புதான் ஜெய்ஷ்-இ-முகம்மது. இந்த அமைப்புதான் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை கடுமையாக குற்றம்சாட்டிய இந்தியா, தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக கூறியது. இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என குறிப்பிட்டது.
இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய இம்ரான் கான், ''பாகிஸ்தானின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது சாகசத்தை இந்தியா செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் நிச்சயமான பதிலடியை கொடுக்கும்'' என்று தெரிவித்தார்.
''காஷ்மீர் பிரச்சனைக்கு ராணுவ தீர்வு எதுவும் இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும்'' என்று இம்ரான்கான் தெரிவித்தார். ''தனது சொந்த முன்னேற்றத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கையில் பாகிஸ்தான் ஏன் ஈடுபட போகிறது? என்றும் அவர் வினவினார்.
''பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு வருகிறது. இதில் நாங்கள் 70 ஆயிரம் பேரை இழந்திருக்கிறோம். நாங்கள் அமைதியை நோக்கி நகரும் வேளையில் நாங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது?
இந்தியா இன்னமும் கடந்த காலத்திலேயே தேங்கியிருக்க விரும்புகிதா என நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் காஷ்மீரில் ஏதாவதொரு சம்பவம் நடக்கும்போதும் இந்தியா பாகிஸ்தான் மீது பழி போடுகிறது. காஷ்மீர் சர்ச்சையை பொருத்தவரையில் தீர்வை நோக்கி நகர, ஒரு உரையாடலை துவங்குவதற்கு பதிலாக இந்தியா தேவையின்றி எங்கள் மீது பழி சுமத்துகிறது.
நான் ஒரு விஷயத்தை இந்தியாவுக்கு தெளிவாக கூறுகிறேன். இது புதிய பாகிஸ்தான். புது சிந்தனையோடும் புது மனநிலையுடனும் நாங்கள் உள்ளோம். மற்ற நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களில் எங்கள் தரப்பில் இருந்து யாராவது ஈடுபட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. நாங்கள் என்ன எங்கள் மண்ணில் பயங்கரவாதம் வேண்டும் என்ன விரும்புகிறோமா? '' என்றும் கேட்டுள்ளார்.