காற்று மாசுபட்டு வருவதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் : எரிசக்தி கழகம் எச்சரிக்கை

புதன், 29 ஜூன் 2016 (16:51 IST)
நாம் சுவாசிக்கும் காற்று நாளுக்கு நாள் மாசுபட்டு வருவதால், 2040 ஆம் ஆண்டிற்குள் உயிரிழப்போரின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் என சர்வதேச எரிசக்தி கழகம் எச்சரித்துள்ளது.


 

 
எரிசக்தி மற்றும் மாசுப்பாடு தொடர்பாக சர்வதேச எரிசக்தி கழகம் சமீபத்தில்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
 
உலகளவில் மனித உடல்நலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக, ரத்த அழுத்தம், உணவுப் பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் ஆகிய மூன்று காரணிகளும், நான்காவதாக காற்று மாசுபாடும் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆசிய நாட்டினர்தான் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றனர்.
 
உலகளவில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு வசிப்பிடத்திலும் வெளியிலும் ஏற்படும் காற்றில் உள்ள அமிலம், உலோகம், மண், தூசு, சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை முக்கிய காரணம்.
 
வரும் 2040-ஆம் ஆண்டுக்கும் காற்று மாசுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க எரிசக்தி பயன்பாட்டில் மாற்றங்களையும், உலக அளவில் புகை வெளியிடுதலை குறைக்க நடவடிக்கை கொண்டு வந்தால்தான் முடியும். மேலும், காற்றின் தரத்தை உயர்த்துவதன் மூலம்தான் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.
 
புதிய எரிசக்தி, காற்று தர நிர்ணய கொள்கைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்