சுப தமிழ்ச்செல்வன் படுகொலை எப்படி நடந்தது?: விக்கிலீக்ஸ் வெளியீடு

வெள்ளி, 19 டிசம்பர் 2014 (16:50 IST)
விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சுப தமிழ்ச்செல்வனும், மற்றத் தலைவர்களும் துல்லியமான இலங்கை ராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என்ற சிஐஏ அறிக்கையின் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை  உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, சக்திவாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் ரகசிய அறிக்கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
 
2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்ட 21 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ-யின், நாடுகடந்த விவகாரங்களுக்கான பிரிவினால் ‘கிளர்ச்சி முறியடிப்பில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
ஆப்கானிஸ்தானில்,(2001- ஜூன் 2009), அல்ஜீரியாவில் (1954-1962), கொலம்பியாவில் (2002- ஜூன் 2009), ஈராக்கில் (2004- ஜூன் 2009), இஸ்ரேலில் (1972 தொடக்கம் 1990களின் நடுப்பகுதி, 1990களின் நடுப்பகுதி தொடக்கம், 2009 ஜூன் வரை), பெருவில் (1980-1999), வடஅயர்லாந்தில் (1969-1998) மற்றும் இலங்கையில் (1983 – மே 2009) கிளர்ச்சி முறியடிப்பில், சக்திவாய்ந்த இலக்குகள் குறிவைக்கப்பட்ட விதம் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
 
மேலும், செசனியா, லிபியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் சிஐஏயின் இந்த ரகசிய அறிக்கையில் உதாரணம் காட்டப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியை முறியடிக்க, இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருக்கு நம்பிக்கையானவர்களைக் கொலை செய்வதற்கு 1983ஆம் ஆண்டு முதல்  2009 மே வரையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகளை மோசமாகவும் அதேவேளையில், மிகவும் புத்திசாதுரியமான, இனத் தேசியவாத அமைப்பாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
முதற்கட்ட ரகசியத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, புலிகளின் தலைவர் பிரபாகரனையும், முக்கிய தலைவர்களையும் கொல்வதற்கு, இலங்கை அரசு தனது விமானப்படை மூலம், பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளைப் பயன்படுத்தி, 2007 நவம்பரிலும், 2008 ஜனவரியிலும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இதில் கூறப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், 2007 நவம்பர் 2ஆம் தேதி விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சுப தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமாக இலங்கை ராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என்று ரகசிய அறிக்கை ஒன்று கூறுவதாகவும் சிஐஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 
தலைமை மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி, முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு, பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த ராணுவ இலக்குகளை நெருங்கலாம் என்றும் சிஐஏயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் கேணல் கருணாவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் திறமையாகப் பயன்படுத்தி, இலங்கை அரசு அடைந்த பலன்களையும் சிஐஏயின் இந்த அறிக்கை  சுட்டிக்காட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்