அத்துமீறும் அமெரிக்கா: பெண்கள் நீச்சல் உடையில் விநாயகர் படம்

சனி, 29 ஆகஸ்ட் 2015 (04:10 IST)
அமெரிக்காவில், பெண்கள் அணியும் நீச்சல் உடையில், இந்து மக்கள் போற்றி வணங்கும் விநாயகர் படம் பதிந்து துணிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
 

 
அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பெண்கள் அணியும் நீச்சல் உடை மற்றும் வாட்டர் போலோ உடைகளில் விநாயகர் படத்தை பதித்து  விற்பனை செய்து வருகிறது.
 
இந்த நீச்சல் உடையைக் கண்ட பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த இந்து அமைப்புகள், அமெரிக்க நிறுவனத்தின் இந்த அடாவடி செயலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நீச்சல் உடையை விற்பனை செய்வதை அந்த நிறுவனம் உடனே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இது குறித்து, இந்து அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர்கள் கூறுகையில், பெண்கள் நீச்சல் உடை மற்றும் வாட்டர் போலோ உடைகளில், இந்துக் கடவுளான விநாயகர் படம் பொறித்துள்ளது வேதனை தருகிறது. மக்களின் மத நம்பிக்கைகளில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த ஆடைகளை விற்பனை செய்வதை உடனே தடை செய்ய வேண்டும்.
 
மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உடனே விசாரணை நடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்