H-1B விசா விண்ணப்பத்தை இன்று முதல் அமெரிக்க தூதரகம் பெறுகிறது

செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (18:18 IST)
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகளுக்கான (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் அமெரிக்கத் தூதரகம் பெறத் தொடங்கியுள்ளது. 
 
இந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டுக்கு வரும் 2015-ம் நிதியாண்டின் விசா அனுமதிக்கான எண்ணிக்கை 65,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள்ளாகவே இரு பிரிவுகளுக்கும் தேவையான விண்ணப்பங்கள் பெறப்படும் என்ற நிலையில் ரேண்டம் தேர்வு முறையில் இதற்கான எண்கள் தேர்வு செய்யப்படும் என்று தூதரகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தேர்வு செய்யப்படாத விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தகவல் தொழில்நுட்ப பணியாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
அமெரிக்க முதுகலைப்பட்டம் அல்லது உயர்கல்வி குறித்து வரும் தனியார் விண்ணப்பங்களில் முதல் 20,000 விண்ணப்பங்கள் இந்த எண்ணிக்கையிலிருந்து விலக்கு பெறும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது. பிரிமியம் செயலாக்க விண்ணப்பங்களும் அதிக அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குத் தகுந்தாற்போல் தங்களின் தேர்வுமுறைத் திட்டங்களை தூதரகம் செயல்படுத்தவுள்ளது.
 
கடந்த 2012 ஆம் ஆண்டில் 1,34,000 ஆகவும், கடந்த ஆண்டு 1,24,000 ஆகவும் இருந்த இந்த விண்ணப்பங்கள் கடந்த 2001 ஆம் ஆண்டில் உயர்ந்த பட்ச அளவாக 2,01,000 ஆக இருந்ததாக யுஎஸ்சிஐஎஸ் நிறுவனம் குறிப்பிடுகின்றது. இந்த பணிவிசா குறித்த எண்ணிக்கைகள் அமெரிக்காவில் பிறந்த மாணவர்களுக்கான கல்வி முக்கியத்துவத்தில் அவர்கள் கணினி அறிவியல், கணிதம் போன்ற பல துறைகளில் பிற நாடுகளைவிட இன்றும் பின்தங்கியுள்ளதையே காட்டுகின்றது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்