’என்னைக் கொல்ல முயன்ற தமிழ் கைதியை விடுவியுங்கள்’ - பொன்சேகா கோரிக்கை

வெள்ளி, 18 மார்ச் 2016 (18:38 IST)
தன் மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு உதவிய தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா கேட்டிருக்கின்றார்.
 

 
நேற்று காலை கொழும்பில் நடந்த மகிந்த ராஜபக்ச காலத்து இரகசியங்களை அம்பலப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
 
இது குறித்து பொன்சேகா கூறுகையில், ”தன்னைக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினருக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தார்.
 
அதுபோலவே இராணுவத் தலைமையக குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொறிஸ் என்ற விடுதலைப் புலி உறுப்பினரையும் விடுதலை செய்ய வேண்டும்.
 
நான் சிறைச்சாலையில் இருந்த போது அவரை சந்தித்துள்ளேன். அவரை விடுவிப்பது நல்லிணக்கத்துக்கான ஒரு சமிக்ஞையாக இருக்கும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்