கடலுக்குள் மூழ்கி மறைந்து விளையாடும் பிரான்ஸ் சாலை.....
புதன், 21 செப்டம்பர் 2016 (16:57 IST)
பிரான்ஸ் நாட்டின் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள பர்னெப் வளைகுடாவிலிருந்து நோயிர்மோட்டியர் தீவை இந்த சாலை இணைக்கிறது. இந்த சாலை 4 கிமீ நீளம் கொண்டது.
காற்று வீச்சு காரணமாக அலைகள் உயரே எழும்பும்போது இந்த சாலை கடல் நீருக்குள் மூழ்கிவிடுகிறது. சுமார் 13 அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் ஏறி விடுகிறது.
தினசரி இரண்டு முறை மட்டுமே சாலையில் நீர் வடிந்து போக்குவரத்திற்கு பயன்படும். அதுவும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரை மட்டுமே. அப்போது வேக வேகமாக வாகனஙகளும், மக்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
இந்த சாலை 1701ம் ஆண்டிலிருந்து வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறது. 1840ம் ஆண்டு முதல் இந்த சாலையில் குதிரைகள் மூலமாக போக்குவரத்து துவங்கியது. தற்போது கார்கள் மூலமாக தீவிற்கும், முக்கிய நிலப்பகுதிக்குமான போக்குவரத்து நடக்கிறது.
இந்த சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. நடுவழியில் செல்லும்போது கடல் நீர் மட்டம் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காக, இந்த சாலையில் ஆங்காங்கே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை தண்ணீர் மட்டம் அதிகரித்தால் இந்த கோபுரத்தில் ஏறி தப்பிக்கலாம்.
கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து எச்சரிக்கை செய்வதற்கான மையமும் இந்த சாலையின் இருபுறத்திலும் செயல்படுகிறது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சாலையாக குறிப்பிடப்படுகிறது.
ராமர் பாலம் போலவே இயற்கையாகவே அமைந்ததுதான் இதன் முக்கிய சிறப்பு. அதில், தற்போது கான்கீரிட் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
1999ம் ஆண்டு டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றுக்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றின் துவக்கப் புள்ளியாகவும் இந்த சாலை அமைந்தது குறிப்பிடத்தக்கது.