ஆப்கானில் பெண் அடித்து, எரித்துக் கொலை: 4 பேருக்கு மரண தண்டனை - 8 பேருக்கு 16 ஆண்டு சிறை!

புதன், 6 மே 2015 (18:22 IST)
ஆப்கானிஸ்தானில் பெண் அடித்து, எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனையும், 8 பேருக்கு 16 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 

 
ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலை சேர்ந்தவர் பர்குந்தா (வயது 27). இந்தப் பெண்ணுக்கும் மத குரு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை மனதில் வைத்து, அந்தப் பெண், புனித நூலை எரித்து விட்டதாக மதகுரு குற்றம் சாட்டினார். அதைக் கேட்டதும் ஆத்திரம் அடைந்த உள்ளூர் மக்கள், அந்தப் பெண்ணை சூழ்ந்தனர். அவரை தரதரவென இழுத்து, கட்டிடம் ஒன்றின் உச்சியில் இருந்து தள்ளினர். அவர்மீது காரை ஏற்றினர்.
 
கற்களாலும், தடிகளாலும் தாக்கினர். அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அப்போது அவரது உடலை தீ வைத்து கொளுத்தினர். எரிந்தும், எரியாத நிலையில் அவரது உடலை அங்குள்ள ஆற்றில் வீசினர். போலீசார் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தனர். இச்சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
 
இந்த கொடூர சம்பவம், செல்போனில் படம் எடுக்கப்பட்டு, ஆன்லைனில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவருடைய பெற்றோர்கள் கூறினர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் போராட்டத்தில் குவித்தனர். ஆப்கானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தது உலக நாடுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
 
அதைத் தொடர்ந்து பர்குந்தா படுகொலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் புனித நூலை எரிக்கவில்லை என்றும், அவர் மீது பழிபோட வேண்டும் என்ற காரணத்தினால்தான் மதகுரு பொய்யாய் குற்றம் சாட்டி, அவரை கொல்ல வழி வகுத்துவிட்டார் என்றும் தெரிய வந்தது.
 
இந்த நிலையில், பர்குந்தா படுகொலை தொடர்பாக 49 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் 19 பேர் போலீஸ் அதிகாரிகள். அந்த வழக்கு காபூல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது பலர் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். மேலும், அந்தப் பெண் புனித நூலை எரிக்கவில்லை என்று அரசு தரப்பில் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
 
முடிவில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 4 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 8 பேருக்கு 16 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 18 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் நடந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தும், அதைத் தடுக்கத்தவறிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள போலீசார் 19 பேர் மீது வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்