மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: இலங்கையில் மோடி உறுதி!

வெள்ளி, 13 மார்ச் 2015 (14:53 IST)
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று இலங்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா - இலங்கை இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. விசா நீடிப்பு, சுங்கத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
 
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தந்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 1987க்கு பிறகு இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பயணமாகும். இருநாட்டு உறவில் புதிய மைல்கல் எட்டப்படும். உறவை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது அவசியம்.
 
மீனவர்கள் பிரச்சனை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் இப்பிரச்சனை, மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. எனவே, இப்பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுகி நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு இந்திய - இலங்கை மீனவ பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து, தீர்வை முன்வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இருநாட்டு அரசுகளும் எதிர்காலத்தில் செயல்படும்.
 
இலங்கை பயணிகள் இந்தியா வந்ததும் விசா வழங்கும் முறை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். டெல்லியில் இருந்து கொழும்புவிற்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும். இருநாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பதுடன் உறவை பலப்படுத்தவும் முடியும்" என்றார்.
 
மோடியின் வருகை குறித்து மைத்திரிபால சிறிசேனா கூறுகையில், “இந்திய பிரதமர் மோடி வருகையால் இலங்கை மக்கள் பெருமை அடைந்துள்ளனர் என்றும், யாழ்ப்பாணத்திற்கு இந்திய பிரதமர் செல்வது வரலாற்று சிறப்பு மிக்க பயணமாகும் என்றும், வரலாறு மற்றும் மத ரீதியாக, இந்தியா - இலங்கை நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும் இலங்கை அதிபர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்