‘இதயத்தைக் கழற்றி வைத்துவிட்டு இந்தியாவிற்கு வாருங்கள்’ – தேனிலவிற்கு வந்த இங்கிலாந்து தம்பதியினர் தற்கொலை

வியாழன், 6 நவம்பர் 2014 (12:49 IST)
இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24)  ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 
இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத் வரலாற்றைப் பற்றிய புத்தகம், தொலைபேசிகள் மற்றும் பெரிய பயணப் பைகளை கைப்பற்றியுள்ளனர்.
 
ஜேம்ஸ் தான் தற்கொலை செய்து கொவதற்கு முன்பு, “இந்தியா வர விரும்பினால் இதயத்தை கழற்றி வைத்துவிட்டு வாருங்கள். இங்குள்ள ஏற்றத் தாழ்வுகளை சகித்துக்கொள்ள நல்ல மனிதர்களால் இயலாது”  என்று தனது டுவிட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், அவர்களது மரணம் குறித்து கருத்து தெரிவித்த காஸ்கலின் தந்தை, ‘இந்தியாவின் மோசமான வறுமை நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து தங்களது முகத்தை அழித்துக்கொண்டனர்’ என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ‘இருவரும் காதலித்து சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தேனிநிலவு கொண்டாட இந்தியா செல்ல வேண்டும் என்று விரும்பினர்.
 

 
இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்த்தபடி அவர்கள் எனக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். அப்போது ஜேம்ஸ் தன்னுடைய மனவருத்தத்தை அடிக்கடி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவில், தான், பரவலாகப் பார்த்த சமூக ஏற்றத்தாழ்வு உள்ளது. இது நாங்கள் கேள்விப்பட்ட இந்தியாவாக இல்லை, இங்கு மனிதர்களிடத்தில் பேதங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்கு ஏழைகளுக்கு சரியான மருத்துவம் செய்து கொடுப்பதில்லை அதே நேரத்தில் பணக்காரர்களுக்குத் தரமான சிகிச்சைவழங்க பல்வேறு மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை. பணத்திற்கும் ஜாதியச் சமூகத்திற்கும் மட்டுமே மதிப்பு உள்ளது என்று அடிக்கடி கூறுவார்” என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்