இந்தியாவை ஆட்சிசெய்த இங்கிலாந்து, நஷ்டஈடு தர வேண்டும்: புள்ளி விவரங்களுடன் பேசிய சசி தரூர்

வியாழன், 23 ஜூலை 2015 (09:31 IST)
200 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நஷ்டஈடு தர வேண்டும் என்று கூறி லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார்.
 
"இங்கிலாந்து, தனது முன்னாள் காலனி நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமா?" என்ற தலைப்பில், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட, காங்கிரஸ் எம்பி. சசிதரூர் பங்கேற்று பேசினார்.
 
அப்போது சசி தரூர் பேசுகையில், "இந்தியாவை இங்கிலாந்து அடிமைப்படுத்துவதற்கு முன்னர், உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதமாக இருந்தது.
 
ஆனால், இங்கிலாந்து வெளியேறியபோது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக குறைந்திருந்தது.
 
இங்கிலாந்து தனது நலனுக்காகவே இந்தியாவில் ஆட்சி செய்ததுதான் இதற்குக் காரணம். இந்தியாவில் கொள்ளை அடித்ததால்தான் இங்கிலாந்து தன்னை வளப்படுத்திக்கொண்டது.
 
2 ஆம் உலகப்போரின் போது பிரிட்டன் படையில் 6 இல் 1 பங்கு இந்தியர்கள். அந்தப் போரில் 54,000 பேர் போரில் பலியாகியுள்ளனர். 65,000 பேர் காயமடைந்தனர். 4000 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.
 
இந்தியாவிலிருந்து ஆங்கலேயர்கள் பருத்தியை எடுத்துச் சென்று, இங்கிலாந்தில் ஆடைகள் தாயாரித்து இந்தியாவில்லேயே கொண்டுவந்து விற்பனை செய்தனர்.
 
இதனால், உலகத் தரம் வாய்ந்த பருத்தி ஆடைகளின் ஏற்றுமதியாளர்களாக உயர்ந்திருந்த இந்தியா, இறக்குமதி நாடாக்கப்பட்டது. இதனால் இந்திய நெவவாளர்கள் கடுமையான துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
 
இத்தகு காரணங்களுக்காக, இந்தியாவுக்கு இங்கிலாந்து நஷ்டஈடு தர வேண்டும்". என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான புள்ளி விவரங்களுடன் சசி தரூர் பேசினார்.
 
இந்நிலையில், சசி தரூரின் சுமார் 15 நிமிடபேச்சு வீடியோ, யு டியூப்பில் வெளியாகியுள்ளது. அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சசி தரூரின் கருத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்