பலியானவர்களின் பெற்றோரை பார்க்கமுடியவில்லை - சடலங்களை மீட்கும் நீச்சல் வீரர்கள்

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (13:34 IST)
சுமார் 477 பயணிகளுடன் சென்ற தென் கொரிய கப்பலொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 108 பேர் பலியானதாகவும், 190க்கும் மேற்பட்டவர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
விபத்திற்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், இக்கப்பலில், பயணம் செய்தவர்கள், கப்பலில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அதன் பின் கப்பல் மெதுவாக மூழ்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளனர். 
 
இவ்விபத்தில் குறைந்தபட்சம் 108 பேர் பலியானதாகவும்  சுமார் 194 பேரை காணவில்லை என்றும், இதுவரை மூழ்கிய கப்பலில் இருந்து 174 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 
 
கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவர். அவர்கள் பள்ளியில் இருந்து சுற்றுலாவிற்காக ஜெஜு தீவுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் காணாமல் போன பள்ளி மாணவர்கள், கப்பல் மூழ்கிய போது அவர்களது உறவினர்களுக்கு அனுப்பிய உருக்கமான செய்திகள், மாணவர்களின் உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தெரிவித்த அந்நாட்டின் அதிபர் பார்க் கென் ஹை, இந்த கப்பல் விபத்து திட்டமிட்ட கொலைக்கு ஒப்பாகும் என்றும்,   கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்ட நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலில் மூழ்கி சடலங்களை மீட்கும் பணியில் பல நீச்சல் வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு சடலத்தை மீட்கும் போதும் பலியானவர்களின் பெற்றோரை பார்க்கமுடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
இந்நிலையில், விபத்துக்குள்ளான கப்பல் கேப்டன் மற்றும் பணியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பணியில் அலட்சியம், விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது 
 

வெப்துனியாவைப் படிக்கவும்