சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (18:46 IST)
சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை, 20 நிமிடங்கள் கழித்து உணவக ஊழியரைக் கடித்ததால் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தெற்கு சீனாவில் உள்ள குவாங்க்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாம்பு உணவு தயாரிக்க,  ஊழியர் ஒருவர் ராஜநாகத்தின் தலையை துண்டித்தார். பாம்பின் தலையை அகற்றிய அவர் அதன் உடல் பகுதியை சமைத்த பிறகு மீதமிருந்த தலை மற்றும் பிற கழிவுகளை எடுத்து குப்பையில் வீசவதற்காக பாம்பின் தலையைத் தொட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக துண்டிக்கப்பட்டு 20 நிமிடங்கள் ஆன அந்த ராஜநாகத்தின் தலை ஊழியரின் கையை கடித்தது. 
 

இதனால் அவர் சில நிமிடங்களிலேயே பலியானார்.
இது குறித்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் ஒருவர், ராஜநாகம் போன்ற ஊர்வன உயிரினங்கள் தலை துண்டிக்கப்பட்டு ஒரு மணி நேரம் வரை செயல்படும் திறன் கொண்டவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.   
 
இச்சம்பவம் அந்த உணவகத்திற்கு வந்திருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்