அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதுமே அவர் கையெழுத்திட்டுள்ள விஷயங்கள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப், முதல் நாளிலேயே தனது அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். தனது முந்தைய பதவி காலங்களிலேயே மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் தென் அமெரிக்க மக்கள் நுழைவதை கடுமையாக எதிர்த்து வந்த ட்ரம்ப் இதற்காக அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவரே கட்டியதெல்லாம் பலரும் அறிந்தது.
அது போல ஆண், பெண் தவிர பிற பாலினத்தவர்கள் குறித்தும் ஒவ்வாமையான கருத்துகளையே டொனால்ட் ட்ரம்ப் கொண்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து க்ரீன் கார்டு பெற்று அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கும் அவர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
தற்போது மீண்டும் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதுமே அந்த கடும் கட்டுப்பாடுகளை நோக்கி அவர் நகரத் தொடங்கியுள்ளார். முதலாவதாக அமெரிக்காவில் ஆண் - பெண் தவிர பிற பாலினத்தினருக்கான அங்கீகாரத்தை அவர் ரத்து செய்துள்ளது LGBTQ சமூகத்தை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதை தொடர்ந்து பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்கா விலகுவதாக அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த பருவநிலை ஒப்பந்தம் வல்லரசு நாடுகள் பயன்படுத்தும் கார்பன் அளவு மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் எரிக்கும் கார்பன் அளவில் விகிதாச்சாரங்களை நிர்ணயிக்கிறது. இதில் ட்ரம்புக்கு ஆரம்பம் முதலே ஒவ்வாமை இருந்து வருகிறது.
அமெரிக்காவில் கார்பன் எரிப்பை குறைக்க மின்சார வாகனங்கள் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், அந்த கட்டுப்பாடையும் தளர்த்தியுள்ள ட்ரம்ப், மக்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிகளவில் மக்கள் வாகன புழக்கம் கொண்டவர்கள் என்பதால் இந்த கட்டுப்பாடு தளர்வால் பருவநிலை மாற்றத்தில் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.
கடைசி ஆனால் முடிவல்ல என்ற ரகத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேறுவதற்கு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவிடம் அதிக நிதி பெற்ற உலக சுகாதார அமைப்பு கொரோனா காலத்தில் நிறைவாக செயல்படவில்லை என்று அவரது ஆட்சிக் காலத்திலேயே ட்ரம்ப் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் அமெரிக்காவின் உள்நாட்டு ஒப்பந்தங்களை மட்டுமல்லாது உலகளாவிய ஒப்பந்தங்களையும் திடீரென நிராகரித்து வருவதும், வெளியேறி வருவதும் அமெரிக்காவில் மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என பலரும் விமர்சிக்கின்றனர்.
Edit by Prasanth.K