சீனா - பாகிஸ்தான் நாட்டு உறவு இமயமலையை விட உயர்ந்தது - சீனா அதிபர் ஜின்பிங்

புதன், 22 ஏப்ரல் 2015 (15:41 IST)
சீன அதிபர் ஜின்பிங் சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு உறவு, இமயமலையை விட உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
 
சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தார். நேற்று அவர் அந்த நாட்டின் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் பேசினார். அவர், சீனாவின் 130 கோடி மக்களின் சார்பாகவும், பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.
 

 
தொடர்ந்து பேசிய ஜின்பிங், ”பாகிஸ்தானும், சீனாவும் சந்தித்த போராட்டங்கள்தான் அவற்றின் இதயங்களையும், மனங்களையும் ஒன்றிணைத்தன. பீஜிங்கும், சீனாவும் ஒருவருக்கு ஒருவர் மகத்தான ஆதரவாக இருந்து வருகிறோம்.
 
இந்த ஆண்டு நான் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப்பயணம் உங்கள் நாட்டுக்குத்தான். ஆனால் பாகிஸ்தான் எனக்கு அறிமுகம் இல்லாத நாடு அல்ல. தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் பாகிஸ்தான் முன்னணியில் நின்றுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடி பகுதிகளின் முன்னேற்றத்துக்கும், மறுகட்டுமானத்துக்கும் நாங்கள் உதவுவோம்.
 
பாகிஸ்தான் - சீன உறவு இமயமலையை விட உயர்ந்தது. பெருங்கடலினும் ஆழமானது. தேனினும் இனிமையானது. சீன மக்கள், பாகிஸ்தான் மக்களை நல்ல நண்பர்களாக, நல்ல கூட்டாளிகளாக, நல்ல சகோதரர்களாக கருதுகின்றனர்.
 
சீனாவை முதன்முதலாக ஒரு நாடாக அங்கீகரித்த நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். சீனாவுடன் முதலில் தூதரக உறவு வைத்துக்கொண்ட முதல் இஸ்லாமிய நாடும் பாகிஸ்தான்தான். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் திறனை சீனா உயர்த்தும்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்