கிராம மக்கள், சுற்றுலா பயணிகளால் சேதமடைந்து வரும் சீனப் பெருஞ்சுவர்

செவ்வாய், 30 ஜூன் 2015 (18:49 IST)
கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சேதமடைந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 

 
சீனப் பெருஞ்சுவரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குவது சீனப் பெருஞ்சுவர். இந்த சுவரின் கட்டுமான பணி கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இதையடுத்து, 1368 முதல் 1644 வரையிலான காலகட்டத்தில் சுமார் 6,300 கிமீ தூரத்துக்கு சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. சீனாவின் ஷாங்காய்குவானில் இருந்து ஜியாயுகுவான் வரை நீண்டுள்ள இந்த பெருஞ்சுவரை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.
 
பழமைவாய்ந்த இந்த சுவர் தற்போது அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பருவநிலை மாறுபாடு, இயற்கை சீற்றம் போன்றவற்றால், பழமை வாய்ந்த பெருஞ்சுவர் சேதமடைந்து வருகிறது. இதுமட்டுமின்றி, வடக்கு பகுதியில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் வசிக்கும் கிராம மக்கள் பெருஞ்சுவரில் இருந்து செங்கல், கற்கள் போன்றவற்றை பெயர்த்து எடுத்து வீடுகள் கட்ட பயன்படுத்துகின்றனர். மேலும், உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்வதால், பெருஞ்சுவரின் செங்கலை எடுத்து சுற்றுலா பயணிகளிடம் அதிக விலைக்கு விற்கின்றனர். தினந்தோறும் அதிகளவில் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், அவர்களும் தங்கள் பங்குக்கு பெருஞ்சுவரை சேதப்படுத்தி விடுகின்றனர்.
 
சீனப் பெருஞ்சுவரில் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள் மழை, வெயில் போன்றவற்றால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. சில இடங்களில் கோபுரங்கள் இடிந்து விட்டன. மேலும், மரம், செடி, கொடிகள் ஆகியவற்றால் பெருஞ்சுவர் வலுவிழந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் சீனப் பெருஞ்சுவர் தன்னுடைய அடையாளத்தை இழந்து வருகிறது. புராதன சின்னமாக விளங்கி வரும் சீனப் பெருஞ்சுவர் சேதமடைந்து வருவது கவலை அளிப்பதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. பெருஞ்சுவரை சேதப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது.
 
ஆனாலும் தொடர்ந்து அத்துமீறல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கவும், பெருஞ்சுவரை மேம்படுத்தவும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்