பேருந்தில் சென்ற பொதுமக்களை சரமாரியாக சுட்ட தீவிரவாதிகள்: 43 பேர் உயிரிழப்பு

புதன், 13 மே 2015 (12:32 IST)
பாகிஸ்தானில் பைக்கில் வந்த தீவிரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள அல்-அசார் பூங்கா காலனியைச் சேர்ந்த பேருந்தில் இஸ்மாயிலி சமூகத்தை சேர்ந்த 60 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
 
அங்குள்ள சபூரா சவுக் பகுதியில் அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது அப்போது, அங்கு பைக்கில் வந்த 8 தீவிரவாதிகள் திடீரென பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.
 
பின்னர் பேருந்தில் ஏறி, பயணிகள் ஒவ்வொருவரின் தலையில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
 
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
பலியானவர்களில் பெரும்பாலானவர்களுள் 16 பெண்களும் அடங்குவர். இந்த கொடூர  கொலை செயலில் ஈடுபட்ட அந்த தீவிரவாதிகள், பின்னர் தாங்கள் வந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த  தாக்குதல் சம்பவத்திற்கு தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்