வானுயர நிற்கும் இந்த கட்டிடம் எதற்கு தெரியுமா???

வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (14:44 IST)
சமீபகாலங்களில் அன்புக்குரியவர்கள் இறந்து போனால், உரிய மரியாதையோடு வைத்திருப்பதற்காகவே அடுக்கு மாடி கல்லறைகள் உலகின் பல பகுதிகளிலும் கட்டப்படுகின்றன. 


 
 
பிரேசிலின் சான்டோஸ் பகுதியில் உள்ள நெக்ரோபோலே இகுமேனிகா, உலகின் மிக உயரமான கல்லறை என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. 108 மீட்டர் உயரத்தில் 32 மாடிகளைக் கொண்ட கட்டிடமாக இது உயர்ந்து நிற்கிறது.
 
இந்த கட்டிடத்தில் 25 ஆயிரம் உடல்களைப் பாதுகாக்க முடியும். கல்லறை போன்றே இருக்காது என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். கல்லறையில் இளைப்பாறுவதற்கு அறைகள், சிறிய நீர்வீழ்ச்சி, அழகான தோட்டம், கட்டிடத்தின் உச்சியில் ஆலயம், சிற்றுண்டி கூடம் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
 
ஒவ்வொரு அறையும் நல்ல காற்றோட்ட வசதியுடன், 6 உடல்கள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. ஒரு உடல் மட்கிப் போவதற்கு 3 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பிறகு மட்கிய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
 
இறந்தவர்களின் உடல் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அதிகக் கட்டணம் செலுத்தி, இங்கேயே வைத்துக்கொள்ளலாம். 
 
3 ஆண்டுகளுக்கு ஒரு உடலைப் பாதுகாக்க ரூ.4 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கட்டணம். ஒரு குடும்பம் தனி அறை தேவை என்று விரும்பினால் ரூ.34 லட்சம் கொடுக்க வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்