போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 300 பெண்கள் மீட்பு

வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:21 IST)
நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியிலிருந்த 300 பெண்களை அந்நாட்டு ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளதாக, அந்நாட்டு ராணுவ அதிகாரி கிறிஸ் ஒலுகொல்டே தெரிவித்துள்ளார்.
 
நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் தீவிரவாதிகள் கொலை, ஆட்கள் கடத்துதல் போன்ற வற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்கில கல்வி முறைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவதாக போகோ ஹரம் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுவரை நைஜீரியாவில் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி போர்னோ மாநிலத்தில் சிக்பொக் என்ற கிராமத்தில் பள்ளிக்குள் போகோ ஹரம் தீவிரவாதிகள் நுழைந்து அங்கு படித்துக் கொண்டிருந்த 276 மாணவிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி அடர்ந்த காட்டு பகுதிக்குள் கடத்திச் சென்றனர்.
 
 பின்னர் அவர்களின் பிடியிலிருந்து 57 மாணவிகள் தப்பி வந்தனர். எஞ்சிய 219 மாணவிகளை மீட்க ராணுவத்தினர் தீவிர வேட்டை நடத்திவந்தனர்.
 
இந்நிலையில், போகோ ஹரம் தீவிரவாதிகள் தலைவர் அபுபக்கர் செகு கடத்தப்பட்ட மாணவிகளை தீவிரவாதிகளின் திருமணம் செய்து கொள்வார்கள். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தார்.
 
இதனால் கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கலக்கமுற்றனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் கடத்தப்பட்ட மாணவிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தீவிரவாதிகள் மாணவிகளை காட்டுக்குள் ரகசிய இடத்தில் மறைத்து வைத்து இருப்பதாக ராணுவத்துக்குத் தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, ராணுவத்தினர் சாம்பிசா காட்டுக்குள் இருந்த போகோ ஹரம் தீவிரவாதிகளின் 3 முகாம்களை குண்டு வீசி அழித்தனர்.  பின்னர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 200 மாணவிகளையும், 93 பெண்களையும் மீட்டனர். மற்ற 19 மாணவிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை என்பது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்