ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்காக தற்கொலை படை தாக்குதல்: ஆஸ்திரேலிய வாலிபர் பலி

வியாழன், 12 மார்ச் 2015 (18:16 IST)
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்காக தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் ஆஸ்திரேலிய வாலிபர் ஒருவர் பலி ஆனார்.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வாலிபர்களும் சேர்ந்து ஈராக் மற்றும் சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த 18 வயது வாலிபர் ஜேக் பிலார்டியும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மெல்போர்ன் நகரில் இருந்து புறப்பட்டு, துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகர் வழியாக ஈராக்கிற்கு சென்றார். அங்கு அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட்டு வந்தார்.
 
அவர் ஈராக் செல்வதற்கு முன் தனது வீட்டில் ஏராளமான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையும் விட்டுச்சென்றது தெரிய வந்தது. அதைக் கண்ட அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, உஷார்படுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில், ஜேக் பிலார்டி தனது பெயரை அபு அப்துல்லா அல் ஆஸ்திரேலி என்று மாற்றிக்கொண்டு, அன்பார் மாகாணத்தில் உள்ள ரமடி நகரில் வெடிகுண்டுகள் நிரப்பிய வேனில் சென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் அவர் உடல் சிதறி பலியாகி விட்டார்.
 
இது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஜேக், ஒரு வெள்ளை நிற வேனில், அபு அப்துல்லா அல் ஆஸ்திரேலி என்ற பெயரும், கடவுள் இவரை ஏற்றுக்கொள்வாராக என்ற வாசகங்களும் எழுதப்பட்டு காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தற்கொலை படை தாக்குதலில் ஜேக் கொல்லப்பட்டு விட்டதை ஐ.எஸ். தீவிரவாத இயக்க தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.
 
ஜேக் பிலார்டி தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியாகி இருப்பது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் நேற்று கருத்து தெரிவிக்கையில், உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த தகவல்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு மற்றொரு உதாரணம் ஆகும்.  இது ஒரு பயங்கரமான சூழ்நிலை.  இப்படிப்பட்ட கொடூரமான சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்கள் கவர்ந்து இழுப்பதிலிருந்து, நாம் நமது வாலிபர்களை முடிந்த அளவு காப்பாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என கூறினார். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் விசாரணையும் நடத்தப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்