விஷ ஊசி போடப்பட்டதற்கு பின் 2 மணி நேரம் துடிதுடித்து இறந்த மரண தண்டனை கைதி

வெள்ளி, 25 ஜூலை 2014 (15:29 IST)
அமெரிக்காவில் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டப்பின் அவர் உடனடியாக உயிரிழக்காமல் சுமார் 2 மணி நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு துடிதுடித்து இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அமெக்காவின் அரிசோனா மாகாணத்தில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜோசப் உட் என்ற கைதிக்கு விஷ ஊசி போடப்பட்டது. 
 
எப்போதும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது விஷ ஊசி போட்டப்பின் 10-15 நிமிடங்களுக்குள் உயிர் பிரியுமென தெரிவிக்கபட்டுள்ள நிலையில், ஜோசப் உட்டிற்கு விஷ ஊசி போடப்பட்டு 2 மணி நேரம் அவரது உயிர் பிரியாமல் இருந்துள்ளது.
 
மூச்சு விட முடியாமல் அவர் நிலத்தில் இருந்த மீனைப் போல தவித்ததாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஜோசப் உட் தவித்துகொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில், நெருக்கடி கால மனுக்களை வழக்கறிஞர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்தனர். 
 
அந்த மனுக்களில் உட்டிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி விட்டு, அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மனுக்களை நீதிமன்றங்கள் ஏற்காததால் உட் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்தார். 
 
ஜோசப் உட் துடிதுடித்து இறந்தது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள அரிசோனா மாகாண ஆளுனர்   உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்