அமெரிக்காவில் இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார் நரேந்திர மோடி

ஞாயிறு, 28 செப்டம்பர் 2014 (10:24 IST)
5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
 
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளுடன் அல்கொய்தா தாக்குதல் நடத்திய சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நரேந்திர மோடி பார்வையிட்டார்.
 
பின்னர், அவர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிர்களை தியாகம் செய்தவர்களின் கிரானைட் கல்வெட்டுகளின் முன் நின்று சிறிது நேரம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தினார்.
 
2001 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக, நியூயார்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் அம்மாநகர மேயரான மைக் ப்ளூம்பர்க்கை மோடி சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்பின் போது, நகரங்களில் நல்ல நிர்வாகத்தை நடத்துவது எப்படி என்று நரேந்திர மோடியிடம் கேள்வியெழுப்பிய ப்ளூம்பர்க் குஜராத்தில் நகர நிர்வாகம் மேற்கொள்ளப்படுவது போல் நியூயார்க்கிலும் நகர நிர்வாகத்தை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்