உலகம் முழுவதும் மக்கள் பலருக்கு பூமியை தாண்டி வேறு கிரகங்களில் ஜீவராசிகள் வாழ்வது குறித்த பல கற்பனைகள் உள்ளன. அறிவியலும் வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ சாத்தியமுள்ளதாகவே கூறுகிறது. இந்த வேற்றுகிரக ஏலியன்கள் பூமியை ஆக்கிரமிக்க வருவது போல ஹாலிவுட்டில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. மேலும் அடிக்கடி வானில் மர்ம பறக்கும் பொருட்கள் தோன்றுவதும் அவற்றை மக்கள் ஏலியனின் பறக்கும் தட்டு என நம்புவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் நடந்தது. இது அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களான டெக்ஸாஸ், கலிபொர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும், மெக்ஸிகோ, பனாமா, நிகாரகுவா உள்ளிட்ட நாடுகளிலும் மக்கள் கண்களால் பார்க்கும் வகையில் தோன்றியது.
அவ்வாறாக டெக்ஸாஸில் சிலர் சூரிய கிரகணத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது மேகங்களுக்கு நடுவே நிழல் போல பொருள் ஒன்று வேகமாக கடந்து சென்றது. ஆனால் அது மேக கூட்டங்களை விட்டு வெளியேறாமல் அப்படியே மாயமாக மறைந்துவிட்டது. சரியாக சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது கடந்து சென்ற அந்த பொருள் ஏலியன்களின் பறக்கும் தட்டுதான் என பலரும் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.
அது விமானமாக இருக்கலாம் என்று சிலர் வாதிட்டாலும், விமானம் பறக்கும்போது ஏற்படும் சத்தம் அதில் ஏற்படாததும், விமானத்தை விட வேகமாக பயணித்ததும், மேகங்களுக்கு உள்ளே பயணித்த அந்த கலம் வெட்டவெளி வானில் தோன்றாமல் மறைந்து போனதும் பலருக்கு புதிராகவே உள்ளது.