ஆட்டு மந்தைகள் போல் அரசியல்வாதிகள் பின்னால் போகக்கூடாது : கமல்ஹாசன்

திங்கள், 8 பிப்ரவரி 2016 (11:35 IST)
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியா மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


 

 
அந்த விழாவில் அவர் பேசியதாவது “இந்தியாவில் பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது. ஆனால் ஜனநாயகம் என்றாலே பேச்சு சுதந்திரம் என்பதுதான் தாமாகவே அர்த்தம் ஆகிறது.
 
இந்திய ஜனநாயகத்தை நான் விமர்சிக்கவில்லை. மாறாக, இந்திய ஜனநாயகத்தை நினைத்து நான் பெருமிதப்படுகிறேன். ஒட்டுமொத்த உலகத்துக்கே இந்தியா முன் உதாரணமாக திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
 
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உலகம் புதிய சவால்களை சந்திக்கப் போகிறது. புதிய வாய்ப்புகளை கண்டு அடையப்போகிறது. இந்தியா மன நிறைவு அடைந்து விட்டு இருந்து விடக்கூடாது. அது உலக தரங்களை ஏற்படுத்த வேண்டும்.
 
ஒரு காலத்தில் வேற்றுமையில் ஒற்றுமை என்று பண்டித ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் இன்றைக்கு அதை அதிவேகமாக இழக்க முயற்சித்து கொண்டிருக்கிறோம்.
 
இன்றைய நாட்களில் ஜனநாயகம் பற்றி பிரசங்கம் செய்பவர்கள், ஜனநாயகம் என்பது பேச்சு சுதந்திரத்துக்கான நம்பிக்கை என்று நம்மை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கலைஞனாக பேச்சு சுதந்திரம் என்பது ஆளும் அரசியல் நிலையில் இருந்து மாறுபட்டது என்று நான் நம்புகிறேன்.
 
ஜனநாயக அலுவலகங்களின் வாயிலாகத்தான் அடால்ப் ஹிட்லர் அதிகாரத்துக்கு உயர்ந்தார். இந்திய அரசியல் சரித்திரத்திலோ நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. குரல்கள் ஒடுக்கப்பட்டன.
 
பேச்சு சுதந்திரத்துக்கான ஒரே கோட்டை ஜனநாயகம் என அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது முன்னேற்றத்துக்கான பணி. அதை பாதுகாப்பதற்கு தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்” என்றார்.
 
மேலும் “எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தில் அல்லாமல், விழிப்புணர்வுடன் இருப்பதற்காகவும், ஜாக்கிரதையாக இருப்பதற்காகவும் அரசியலில் இருக்க வேண்டும்.
 
ஆனால், ஆட்டு மந்தைகளைப்போல் அரசியல் மேய்ப்பர்களின் பின்னால் நாம் சென்று விடக்கூடாது” என்று கமல்ஹாசன் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்