உலகம் முழுவதற்கும் ஊக்கு சக்தியாகத் திகழ்ந்தவர் அப்துல் கலாம்: ஒபாமா புகழாரம்

புதன், 29 ஜூலை 2015 (10:24 IST)
கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதற்கும் ஊக்கு சக்தியாகத் திகழ்ந்தவர் அப்துல் கலாம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். 
 
இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மறைவுக்கு அமெரிக்க மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சாதாரண நிலையில் இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், ஒரு ஆராய்ச்சியாளராகவும், ராஜதந்திரியாகவும் இருந்து இந்தியாவின் உயர்ந்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலும் மதிப்பு மிக்க தலைவராக விளங்கினார்.
 
1962 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசாவுக்கு வருகை தந்த அப்துல் கலாம், இந்திய-அமெரிக்க நல்லுறவு மேம்பட வேண்டும் என்று விரும்பி அதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்தினார்.
 
இரு நாடுகளுக்கு இடையிலான விண்வெளி ஆராய்ச்சிக்கான கூட்டு முயற்சிகள் விரிவடைவதற்காக பெரிதும் பாடுபட்டவர் அப்துல் கலாம்.
 
இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக அவர் பதவி வகித்த காலகட்டத்தில் இந்திய-அமெரிக்க நல்லுறவு சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருந்தது.
 
அப்துல் கலாமின் தன்னடக்கமும், எளிமையும், பொதுச் சேவைக்கான அவரது அர்ப்பணிப்பும் அவருக்கு மக்கனின் குடியரசுத் தலைவர் என்றும் பெயரை பெற்றுத்தந்தது.
 
கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் ஊக்கு சக்தியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். இவ்வாறு ஒபாமா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்