'சீனா : கலவரக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை '

வியாழன், 9 ஜூலை 2009 (17:43 IST)
சீனாவின் ஷிஞ்சியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தை தூண்டிவிட்ட மற்றும் இதரக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.

156 பேரை பலிகொண்ட ஷிஞ்சியாங் மாகாண தலைநகர் உரும்கி நகரில் ஏற்பட்ட கலவரத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ , ஜி 8 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மேற்கொண்ட தமது இத்தாலி பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு நேற்று அவசரமாக நாடு திரும்பினார்.

இதனையடுத்து கலவரம் தொடர்பாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியின் பொலிட் பீரோ கூட்டம் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ , கலவர குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனையளிக்கப்படும் என்றார்.

ஷிஞ்சியாங் மாகாணத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான பணி என்றும் அவர் வலியுறுத்தியதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியான ஷிஞ்சியாங் மாகாணம் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும்.இங்கு சுமார் 80 லட்சம் உய்குர்ஸ் என்ற பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் தாங்கள் அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் புறக்கணிக்கப்படுவதாக கூறி, தங்களுக்கு சுயாட்சி கோரி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் , கடந்த மாதம் உய்க்குர்ஸ் இன முஸ்லிம்களுக்கும், சீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த சம்பவத்தை அரசு கையாண்ட விதத்தை கண்டித்து, இம்மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கடந்த ஞாயிறன்று இஸ்லாமியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரம் மற்றும் போலீஸ் தாக்குதல் ஆகியவற்றில் பலியானோர் எண்ணிக்கை 156 ஐ தொட்டுள்ளதாகவும் , 1000 க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தபப்ட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்