'இலங்கை படையில் மேலும் 50 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவார்கள் '

புதன், 1 ஜூலை 2009 (18:12 IST)
வன்னியில் இலங்கைப் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்காக படையினருக்கு மேலும் 50 ஆயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் இதனை தெரிவித்த கேகலிய ரம்புக்வெல, இதற்கு தேவையான படையினரைச் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் அடுத்த பணியாக இருக்கும்.இதன் முதற்கட்டமாக பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.

அத்துடன், முகாம்களில் உள்ள மக்கள் தமக்கான உணவுப் பொருட்களைத் தாமே சமைத்து உண்ணக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் மக்களின் வாழ்க்கையில் படிப்படியாக இயல்புநிலை மீளக்கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று போர் முடிவுக்கு வந்திருப்பதால் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துக்கொள்ளுமா என சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்.ஆனால், அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, பலமானதொரு படையினரை வைத்திருக்க வேண்டிய அவசியம் இப்போதும் இருக்கின்றது என்றார்.

16 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் விடுதலைப் புலிகள் அமைப்பு வைத்திருந்தது.அதனை யாரும் மறுக்க முடியாது.அதனை நாம் இப்போது மீட்டுள்ளோம்.இவ்வாறு மீட்கப்பட்ட பகுதிகளை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும்.

அத்துடன், கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.இவ்வாறு மீட்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தலுக்குள்ளாகக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

இதற்காக முப்படைகளுக்கும் , காவல்துறைக்கும் 50,000 பேரைச் சேர்த்துக்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்.இதன் ஒரு கட்டமாக இதுவரையில் 22 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்