ஸ்வாட் பகுதிக்குள் ராணுவம் முன்னேற்றியது: 1000 தாலிபான்கள் பலி

திங்கள், 18 மே 2009 (12:53 IST)
தாலிபான்களின் ஆதிக்கமுள்ள ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி முன்னேறி வருகிறது. அப்பகுதியில் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

மர்டன் பகுதியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், ஸ்வாட் பகுதியில் உள்ள அனைத்து தாலிபான்களையும் விரட்டுவதே தங்களின் இலக்கு என்றும், அவர்கள் மீது எந்தக் கரிசனமும் காட்டப்படாது என்றும் கூறினார்.

கடந்த சில நாட்களாக ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 தாலிபான் தளபதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாலிபான்கள் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். எனவே, மீதமுள்ள தாலிபான்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு தாலிபான்கள் சரணடைய வேண்டும்; இல்லையென்றால் அவர்களும் கொல்லப்படுவார்கள் என ரெஹ்மான் மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதால் ஸ்வாட் பகுதியின் மின்கோரா உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்