ஸ்டெம் செல் மூலம் செயற்கை சிறுநீரகம்; ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை

செவ்வாய், 17 டிசம்பர் 2013 (11:45 IST)
FILE
ஸ்டெம் செல்களிலிருந்து சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சிறுநீரக நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும்.

மேலும், சிறுநீரக பாதிப்பால் உயிரிழக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் அற்புதமான கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது.

இதுகுறித்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியியல் ஆய்வு நிறுவனப் பேராசிரியர் மெலிஸா லிட்டில் கூறியதாவது:

ஸ்டெம் செல்கள் தம்மைத்தாமே சிறிய வடிவிலான சிறுநீரகமாக மாற்றிக் கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தை எங்களது குழு கண்டுபிடித்துள்ளது.

இந்த சுய அமைப்பின்போது, பல்வேறு வகையான செல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு முக்கியமான உறுப்பாக தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளும். இந்த ஆராய்ச்சியில் அவை தங்களை சிறுநீரகமாக மாற்றிக் கொள்கின்றன. ஆய்வக சோதனைகளின்போது, ஸ்டெம் செல்கள் இதுபோல தங்களை சுய வடிவமைப்பு செய்து கொள்ளுமேயானால், சேதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட உறுப்புகளையும், திசுக்களையும் திசு உயிரியியல் துறை மூலம் எதிர்காலத்தில் மாற்றி அமைக்க முடியும்.

மருந்துகளால் மனிதனின் சிறுநீரகம், இருதயம், கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றன. இதில் எந்த மருந்து சிறுநீரகத்தை பாதிக்கிறது என்பதை இந்த ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட சிறுநீரகம் மூலம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விடலாம். இதனால் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படும். சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே உறுப்பை தானமாகப் பெறுகிறார். இதற்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. மற்றவர்கள் ரத்த சுத்திகரிப்பு செய்கின்றனர். இந்த சிக்கலான சூழ்நிலையிலிருந்து நோயாளிகளை மீட்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்று மெலிஸா லிட்டில் கூறினார்.

குயின்ஸ்லாந்து அறிவியல் துறை அமைச்சர் அயன் வாக்கர் கூறுகையில், மூலக்கூறு உயிரியியல் ஆய்வு நிறுவனக் குழுவின் கண்டுபிடிப்பு சிறுநீரக மருத்துவத்துறையில் ஒரு மைல்கல்லாகும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்