வெடித்தது குண்டு; பாகிஸ்தானில் 7 பேர் சாவு

செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (02:16 IST)
பாகிஸ்தானில் கைபர்-பக்துன்குவா மாகாணத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் நூலிழையில் அம்மாகாண முதலமைச்சர் அமீர் ஹைதர் கான் ஹோதி தப்பித்தார்.

இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அம்மாகாணத்தில் உள்ள நவ்ஷெரா பகுதியில் உள்ள ஃபரூக் அரங்கத்தில் அவாமி தேசியக் கட்சியினர் பேரணி நடத்தினர். அப்போது இந்த வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்பேரணியில் அவாமி தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இவர்களைக் குறி வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

எனினும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்தபோது 1000 க்கும் மேற்பட்ட மக்கள் அரங்கத்தில் இருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்