வங்கதேசம்: போர் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை துவக்கம்

திங்கள், 14 டிசம்பர் 2009 (19:44 IST)
வங்கதேசத்தில் கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலை போராட்டத்தின் போர் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணையை அந்நாட்டு அரசு விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்த விசாரணை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக வங்கதேச சட்டத்துறை அமைச்சர் ஷாஃபிக் அகமத் தெரிவித்தார்.

இந்த விசாரணை தொடக்கத்தின் முதல் நடவடிக்கையாக விசாரணை முகமை ஒன்று ஏற்படுத்தப்படும்.அதன் பின்னர் விசாரணைக் குழுவும், அதனைத் தொடர்ந்து மூன்று உறுப்பினர்கள் கொண்ட நடுவர் மையமும் ஏற்படுத்தப்படும் என்று அகமத் மேலும் கூறியதாக டாக்காவிலிருந்து வெளியாகும் 'தி டெய்லி ஸ்டார்' ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலை போராட்டத்தின்போது, அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சிறந்த வங்காள அறிஞர்களையும், லட்சக் கணக்கான மக்களையும் கொன்றவர்களே 'போர் குற்றவாளிகள்' அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்