லண்டனில் பயங்கரவாத தாக்குதல் : இங்கிலாந்து அச்சம்

திங்கள், 13 ஜூலை 2009 (17:24 IST)
மும்பையில் கடந்த ஆண்டு நடந்ததுபோன்ற பயங்கரவாத தாக்குதல் லண்டனின் முக்கிய சுற்றுலா தலங்களில் நடைபெறலாம் என இங்கிலாந்து அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலைப் போன்று, லண்டனின் முக்கிய சுற்றுலா தலங்களிலும் நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வு துறை அந்நாட்டு அரசை உஷார்படுத்தியுள்ளது.

லண்டனிலுள்ள 100 க்கும் அதிகமான முக்கிய இடங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, லண்டனிலிருந்து வெளியாகும் ' தி டெய்லி ஸ்டார் ' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

படகை பயன்படுத்தி கடல் மார்க்கமாக மும்பைக்குள் புகுந்து தீவிரவாதிகள் எப்படி தாக்குதல் நடத்தினார்களோ, அதே பாணியில் லண்டனிலும் தாக்குதல் நடத்தலாம் என்று புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக லண்டன் நதியில் காவல் துறையினர் மிகுந்த உஷார் நிலையோடு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாக இங்கிலாந்து கடற்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்