யு.எஸ்.-பாகிஸ்தான் உறவு சிக்கலாகிறது!

செவ்வாய், 8 பிப்ரவரி 2011 (13:16 IST)
ரெய்மண்ட் டேவிஸ் எனும் அமெரிக்கர், தன்னை கொள்ளையடிக்க முயன்றதாகக் கூறி இரண்டு பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிக்கலிற்குள்ளாகியுள்ளது.

பாகி்ஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்த ரெய்மண்ட் டேவிஸ், தனது காரை இரு சக்கர வாகனத்தில் இருவர் தொடர்ந்து வருவதை கவனித்துள்ளார். அவர்கள் தன்னை வழிமறித்து கொள்ளையிடவே தொடருகிறார்கள் என்று நினைத்து தனது கைத்துப்பாக்கியால் இருவரையும் நோக்கிச் சுட, அவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இருவரை சுட்டுக்கொன்ற ரெய்மண்ட் டேவிஸ் மீது வழக்குத் தொடர்ந்த காவல் துறை அவரை சிறையில் அடைத்தது. அவர் அமெரிக்கத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி என்றும், அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசிற்கு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இதனை பாகிஸ்தான் ஏற்கவில்லை. ரெய்மண்ட் டேவிஸ் வைத்திருந்த கடவுச் சீட்டில் பாகிஸ்தானில் பணி புரிவதற்கான விசா முத்திரை இருந்தது. அது மட்டுமின்றி, அவர் உரிமம் பெறாமல் கைத் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என்றும் குற்றம் சாற்றி சிறையில் வைத்துவிட்டது.

இதற்கிடையே இரண்டு பாகிஸ்தானியர்களைக் கொன்ற ரெய்மண்ட் டேவிஸை விடக்கூடாது என்று பாகிஸ்தான் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியது. ஏற்கனவே பாகிஸ்தானில் கனன்றுக் கொண்டிருந்து அமெரிகாகவிற்கு எதிரான மன நிலை இச்சம்பவத்தால் மேலும் மோசமடைந்தது.

மேலும் கொல்லப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் அயல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உளவாளிகள் என்றும், அவர்களைக் கொன்ற ரெய்மண்ட் டேவிஸ், அமெரிக்காவின் ஒப்பந்த உளவாளி என்றும் தெரியவந்ததால், சிக்கல் தீவிரமடைந்தது. ரெய்மண்ட் டேவிஸை வெளியில் விடக்கூடாது என்பதில் ஐ.எஸ்.ஐ. உறுதியாக உள்ளது.

இதனால் இதுநாள் வரை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களின் நெருங்கிய கூட்டாளி என்று பாகிஸ்தானை போற்றி வந்த அமெரிக்கா, இதற்கு மேலும் பாகிஸ்தானுக்கு உதவுவதாழ என்ற யோசனையில் உள்ளதாம்.

பாகிஸ்தான் மீது தனது கோவத்தை காட்டத்தொடங்கியுள்ள அமெரிக்கா, அடுத்த மாதம் அமெரிக்கா வரத் திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் அசிஃப் அலி சர்தாரியின் பயணத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. முனிக் நகரில் நடைபெற்றுவரும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அயலுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன், அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா மொஹம்மது குரேஷியை சந்திக்க மறுத்துள்ளார்.

அதே நேரத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் அமெரிக்காவின் மீது கடுப்பாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 2008ஆம் ஆண்டு நவம்பரில் மும்பையின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யை சம்மந்தப்படுத்த வாஷிங்டனில் உள்ள ஒரு வட்டம் முயன்று வருவதாகவும், அமெரிக்கா நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் ஐ.எஸ்.ஐ.க்கு அழைப்பாணை அனுப்பவும் முடிவு செய்துள்ளதும் அதனை கோவப்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டு முரண்பாட்டினால், பாகிஸ்தானிற்கு அளித்துவரும் நிதி உதவியை இரத்து செய்யவேண்டு்ம் என்ற கோரிக்கையும் அமெரிக்காவில் எழுந்துள்ளதாம்.

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள இந்த முரண் பெரும் சிக்கலானால், அது ஆஃப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டிருக்கும் 1,40,000 அமெரிக்க படையினருக்குத் தேவையான பொருட்களை கொண்டு செல்லும் வழியாக இருக்கும் பாகிஸ்தானை அது இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த அளவிற்கு தங்களுக்கிடையிலான சிக்கல் தீவிரமடைவதை இரு நாடுகளுமே விரும்பாது என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்