முஷாரப் தொடர்ந்து பிரிட்டனிலேயே தஞ்சம் ?

சனி, 1 ஆகஸ்ட் 2009 (18:58 IST)
முஷரப்பின் எமர்ஜென்சிக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவர் இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார் என்றும், தொடர்ந்து பிரிட்டனிலேயே தஞ்சமடைந்திருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரப், கடந்த 2007 ஆம் ஆண்டு கொண்டுவந்த அவசர நிலை பிரகடனம் சட்ட விரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பளித்தது.

அதே சமயம் இது தொடர்பாக தண்டனை எதையும் அளிக்காத நீதிமன்றம், முஷாரப்பின் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய உகந்த இடம் நாடாளுமன்றம்தான் என்று கூறிவிட்டது.

இதனால் நாடளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, முஷாரப்பை நாடாளுமன்றம் மூலம் தண்டிக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போன்ற அரசியல் தலைவர்கள் வரிந்துக்கட்டிக்கொண்டு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பினால் அவரது மறைமுக தூண்டுதலினால் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படால் என்று அதிபர் சர்தாரி ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.அதே சமயம் நவாஸ் கட்சி வலியுறுத்தும்பட்சத்தில் முஷாரப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தண்டனை தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் தங்கள்து முன்னாள் இராணுவ தலைவர் தண்டிக்கப்படுவதை பாகிஸ்தான் இராணுவத் தலைமை விரும்பவில்லை.அவ்வாறு முஷாரப் தண்டிக்கப்பட்டால் பாகிஸ்தான் அதிகார மட்டத்தில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு போய்விடும் என்று இராணுவத் தலைவர் பர்வேஸ் கியானி கருதுகிறார்.

இந்நிலையில், லண்டனிலிருந்தபடியே தொடர்ந்து பல்வேறு அயல்நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முஷாரப்பை இப்போதைக்கு நாடு திரும்பவேண்டாம் என்று கியானி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக முஷாரப் இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார் என்றும், தொடர்ந்து பிரிட்டனிலேயே அவர் தங்கியிருப்பார் என்றும் லண்டனிலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்