முஷாரஃபை கொல்ல முயன்றவர் தூக்கிலிடப்பட்டார்

வியாழன், 1 ஜனவரி 2015 (00:41 IST)
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபை 11 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்ய முயன்றார் எனும் வழக்கில் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

விமானப் படையில் தொழிநுட்ப பணியாளராக இருந்த நியாஸ் முகமதுக்கு பெஷாவர் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
மரண தண்டனைகள் மீதான தடையை பாகிஸ்தான் நீக்கியபிறகு தூக்கிலப்படும் ஏழாவது நபர் இவர்.
 
அண்மையில் பெஷாவர் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் பெரும்பாலும் சிறார்கள் உட்பட சுமார் 150 பேர் கொல்லப்பட்ட பிறகு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
ஜெனரல் முஷாரஃபை கொல்ல முயன்றார்கள் என்ற வேறொரு வழக்கில் சமீபத்தில் ஐந்து பேர் தூக்கிலடப்பட்டனர்.
 
இதனிடையே மிகவும் கடுமையான தீவிரவாதிகள் என்று பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறுபவர்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
 
அடுத்த சில வாரங்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அரசு எண்ணியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை மீதானத் தடை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்