மும்பை பயங்கரவாதத்தில் 40 இந்தியர்களின் பங்கும் உண்டு- பாகிஸ்தான்!

திங்கள், 2 ஜூலை 2012 (16:17 IST)
பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பயங்கரவாதி அபு ஜின்டால் கைது குறித்து கருத்து தெரிவிக்கையில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்தியர்களும் உதவினர் என்று புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

மும்பை தாக்குதலில் தொடர்புடைய அபுஜிண்டால் கைது செய்யப்பட்டது குறித்து இதுவரை இந்தியா எங்களிடம் தகவலோ அல்லது கருத்து பரிமாற்றமோ செய்யவில்லை. அபுஜிண்டால் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறான்.

அதன்படி மும்பையில் தாக்குதல் நடத்த இந்தியர்களும் உதவி செய்துள்ளனர். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 40 இந்தியர்கள் உதவியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை வருகிற 4-ந்தேதி முதல் 2 நாட்கள் டெல்லியில் நடைபெற உள்ளது.

அப்போது அபுஜிண்டால் கைது விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளிடம் விளக்கமாக பேசப்படும். இந்த பேச்சுவார்த்தையின் போது அது ஒரு முக்கிய விவகாரமாக இருக்கும்.

மும்பை தாக்குதல் குறித்து எந்த ஒரு தெளிவான விவரத்தையும் இந்தியா வழங்கவில்லை.

பாகிஸ்தானின் நீதிதுறை கமிஷன் விசாரணைக்கு சென்ற போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கவில்லை.

எனவே, விரிவான விளக்கம் அளித்தால் மட்டுமே எங்களால் ஒரு திட்டவட்ட நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்